குலசேகரன்பட்டினம் விண்வெளி பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு - தொடர் போராட்டம் நடத்த முடிவு


தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்த உடன்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே, தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை (டிட்கோ) சார்பில், விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 1,200 நிலங்களை கையகப்படுத்த, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நான்கு வட்டாட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் 23-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து, ஆதியாகுறிச்சி பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 4-ம் தேதி உடன்குடியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகள் 203 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் பேசும்போது, “நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழியில் போராட்டங்களை நடத்த வேண்டும்.

வீடுகள்தோறும் கருப்புக் கொடி கட்டுவது, திண்ணைப் பிரச்சாரம் செய்வது, நிலம் எடுப்பால் பாதிக்கப்படாத மக்களையும் போராட்டத்தில் ஈடுபட வைப்பது ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்” என பேசினார்.

அதிமுக ஒன்றியச் செயலாளர் தாமோதரன், அமமுக ஒன்றியச் செயலாளர் அம்மன் நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, பம்புசெட் விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆறுமுகப்பாண்டியன், தமிழ்நாடு நாடார் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், வணிகர் சங்க மாவட்டத் தலைவர் அம்புரோஸ், ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன் ஆகியோர் பேசினர். கிராம மக்கள், வியாபாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

x