பட்டுக்கோட்டையில் திடீரென உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்: வீட்டுமனை வழங்கி ஆட்சியர் ஆறுதல்


தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- பரிமளா ஆகியோரின் 3-வது மகள் கவிபாலா(12). பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-வது படித்து வந்த இவர், நேற்று முன்தினம் பள்ளியில் சுகாதாரத் துறையினர் வழங்கிய குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட சில மணி நேரங்களில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் உடல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இந்நிலையில், மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பெற்றோர் குறிப்பிடும் மருத்துவரை வைத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மற்றும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் கலைவாணி உள்ளிட்டோர் மாணவியின் பெற்றோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோருக்கு அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. மேலும், அரசு சார்பில் அந்த இடத்தில் வீடு கட்டித் தரப்படும் எனவும், குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவி கவிபாலாவின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இதனிடையே, மாணவி கவிபாலா குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பான செய்திக்குறிப்பில், ‘‘மாணவி கவிபாலாவின் உயிரிழப்பு, அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

x