சென்னை: வியாசர்பாடி ஜீவா - கடற்கரை தடத்தில் திடீரென தண்டவாள பராமரிப்பு பணி நடந்ததால், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன. இதனால், அரைமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப் பட்டு, பயணிகள் கடும் சிரமத்துக் குள்ளாகினர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் முக்கிய மார்க்கமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் உள்ளது. இத்தடத்தில் 200-க்கும் மேற்பட்டமின்சார ரயில் சேவைகள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்தரயில்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணிக்கின்றனர். காலை, மாலை வேளை களில் கூட்டம் நிரம்பிவழியும்.
இருப்பினும், இத்தடத்தில் அவ்வப்போது மின்சார ரயில் சேவை தாமதத்தால், பயணிகள் சிரமத்தையும் சந்திக்கின்றனர். நேற்று முன்தினம், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், ரயிலில் அடிபட்டு இன்ஜினில் அவரது உடல் சிக்கியது. இதனால், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவை அரைமணி நேரம் பாதிக்கப் பட்டது. இதேபோல, அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் களின் சேவையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாசர்பாடி ஜீவா - கடற்கரைரயில் நிலையம் தடத்தில் நேற்று நண்பகலில் திடீரென பராமரிப்பு பணி நடைபெற்றது. இதன் காரணமாக, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பகல் 12.15 மணிக்கு நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சில மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டன. 30 நிமிடம் கடந்தும் ரயில்கள் இயக்கப்படாத தால், பயணிகள் சிலர் ரயில்களில் இருந்து இறங்கி, மாற்று வாகனம் மூலமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மின்சார ரயில் சேவை நண்பகல் 12.55 மணிக்கு மீண்டும் இயங்கத் தொடங்கியது. அரைமணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப் பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது: மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்க வில்லை. திடீரென நண்பகல் 12.15 மணி முதல் 12.55 மணி வரை ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் ரயில் நிலையத்தில் நெடுநேரம் காத்திருந் தனர். சுமார் 40 நிமிடத்துக்குப் பிறகு, ரயில்கள் மீண்டும் இயங் கத் தொடங்கின. அடிக்கடி இதுபோல ரயில்சேவை தாமதத் தால், கடும் சிரமத்தை சந்திக்க நேருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.