மதுரை: ராஜபாளையத்தில் அரசு இடங்களிலுள்ள கட்டிடங்களுக்கான குத்தகை பாக்கி ரூ.33.91 கோடியை வசூலிக்கக் கோரிய வழக்கில் ராஜபாளையம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் சோலைசேரியைச் சேர்ந்த பி.கணேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மற்றும் கொண்டநேரி கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் திருமண மண்டபங்கள், படிப்பகம் மற்றும் சுகாதார பரிசோதனை நிலையம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அனுப்பினோம். அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முறைப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்தேன். அதன்பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்கள், வரி ஏய்ப்பவர்களுக்கு சாதகமாக செயல்படுவதுடன் அரசுக்கு சேர வேண்டிய நிலுவை குத்தகை தொகையை வசூலிக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது, திருமண மண்டபங்கள், நினைவு படிப்பகத்துக்கு ரூ.16.34 கோடியும், சுகாதார பரிசோதனை நிலையம் மற்றும் தையலகத்துக்கு ரூ.17.57 கோடி குத்தகை நிலுவை தொகை இருப்பது தெரியவந்தது.
எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை நிலுவை தொகையை வசூலிக்கவும், நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர்மதுரம் வாதிடுகையில், அரசுக்கு சிங்கராஜகோட்டை ராஜாக்கள் சங்கம் அதிகளவு குத்தகை பாக்கி வைத்துள்ளது. இதை வசூலிக்க வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என்றார். இதையடுத்து நீதிபதி, மனு தொடர்பாக ராஜபாளையம் கோட்டாட்சியர் சிங்கராஜகோட்டை ராஜக்கள் சங்கம் மற்றும் இதில் தொடர்புடையவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.