வீட்டை விட்டு வெளியேற்றிய 2 மகன்கள் மீது நடவடிக்கை: திருப்பத்தூர் ஆட்சியரிடம் வயதான தம்பதி மனு!


திருப்பத்தூர்: வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தலைமை வகித்து மாவட்டம் முழுவதிலும் வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385 பொது நலமனுக்களை பெற்றுக்கொண்டார். அதில், தகுதிவாய்ந்த மனுக்கள் மீது துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கையை விரைவாக எடுத்து மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘ எங்கள் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதனால், நாங்கள் சென்று, வர வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதை கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. எனவே, எங்களுக்கான வழியை மீட்டு தர வேண்டும்’’.இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆம்பூர் வட்டம், பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் அளித்த மனுவில், ‘‘பெரியாங்குப்பம் காந்தி நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் நீண்ட காலமாக ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், இருணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (70), அவரது மனைவி இந்திராணி (65) ஆகியோர் அளித்த மனுவில், ‘‘ எங்களுக்கு சீனிவாசன், பன்னீர்செல்வம் என 2 மகன்கள் உள்ளனர். இருப்பினும் மகன்களில் ஆதரவு இல்லாததால் நாங்கள் தெருவில் நிற்கிறோம். எங்கள் மகன்கள் எங்களை கைவிட்டதால் வாழவழியில்லாமல், வசிக்க இடம் இல்லாமல், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். வயதாகிவிட்டதால் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியவில்லை. இது தெரிந்தும் எங்கள் மகன்கள் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். எனவே, அவர்கள் கடமையை தவறியதால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டம் வட்டி மானியத்தின் கீழ் 2 பேருக்கு ரூ.4.79 லட்சம் மதிப்பில் வட்டி மானியம் மற்றும் தனிநபர் மானியத்தின் 2 பேருக்கு ரூ.39.92 லட்சம் என மொத்தம் 4 பேருக்கு ரூ.44.71 லட்ம் மதிப்பிலான மானியத்தொகை பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

x