மகப்பேறு உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம்; திருச்சி செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை


திருச்சி: துறையூர் வட்டம் சோபனாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் மனைவி மகாலட்சுமி. இவர் 2007-ம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில், தனது மகளுக்கு மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்காக உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்வதற்காக சோபனாபுரம் கிராம சுகாதார செவிலியர் லோகாம்பாள் (57), ரூ.500 லஞ்சம் கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாலட்சுமி, இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மகா லட்சுமி யிடம் ரூ.500 லஞ்ச பணத்தை லோகாம்பாள் பெற்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பாக்கியம், குற்றம்சாட்டப்பட்ட லோகாம்பாளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அபராத த்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே புகார்தாரர் மகாலட்சுமி உயிரிழந்துவிட்டார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.கோபிகண்ணன் ஆஜரானார். வழக்கை திறம்பட நடத்திய லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் சுரகுமரன், பிரசன்ன வெங்கடேஷ், எஃப்.சேவியர் ராணி ஆகியோரை டிஎஸ்பி மணிகண்டன் பாராட்டினார்.

x