பெரம்பலூரில் சோகம்: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த தனியார் கல்லூரி மாணவி உயிரிழப்பு


பெரம்பலூர்: நேற்று அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள வடகரையைச் சேர்ந்தவர் குமார் மகள் குணவதி (18). பெரம்பலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பாடாலூரில் நேற்று நடைபெற்ற தனது தோழியின் சகோதரி திருமணத்துக்கு சென்றுவிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஊருக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். பெரம்பலூர் பாலக்கரை அருகே சென்றபோது, அந்தப் பேருந்து திருச்சி செல்லும் பேருந்து என தெரியவந்தது.

இதையடுத்து, பேருந்தில் இருந்து அவசரமாக இறங்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த மாணவி குணவதியை அங்குள்ளவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குணவதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x