டிரான்சிட் பாஸ் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை: புதுக்கோட்டை டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிரஷர்களில், டிப்பர் லாரிகளுக்கு வழங்கப்படும் டிரான்சிட் பாஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிரஷர்களில் இருந்து ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு கனிமவளத் துறை மூலம் வழங்கப்படும் டிரான்சிட் பாஸ் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, கிரஷர்களில் பொருட்களை ஏற்றாமல் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தால் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படாததால் அப்பணி பாதிக்கப்பட்டது.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குணசேகரன் கூறியதாவது: இங்குள்ள கிரஷர்களில் இருந்து தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 500 லாரிகளிலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 500 லாரிகளிலும் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. 3 யூனிட் பொருட்கள் ஏற்றப்படும் லாரிக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதமும், அதைவிட கூடுதலான எடையில் ஏற்றப்படும் லாரிக்கு ரூ.4 ஆயிரம் வீதமும் டிரான்சிட் பாஸுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், தினமும் 1,000 லாரிகளில் 100 லாரிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், பாஸ் கிடைக்காமல் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் பிடிக்கப்பட்டு, திருட்டுத் தனமாக பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தற்போது ஒரு யூனிட் பொருளுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, அரசு டிரான்சிட் பாஸை தட்டுப்பாடின்றி வழங்குவதுடன், கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக வழங்கவும் ஆலோசிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவள கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கிரஷர் தொழில் மந்தமாகி உள்ளது. இதனால், லாரிகளுக்கான டிரான்சிட் பாஸ் விநியோகம் குறைக்கப் பட்டுள்ளதுடன், ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x