நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது


திருநெல்வேலி: ரெட்டியார்பட்டி அருகே நான்கு வழிச்சாலையையொட்டி மருத்துவ கழிவுகளை கொட்டியது தொடர்பாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரெட்டியார்பட்டி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் மருத்துவ கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, கிருமி நாசினி தெளித்தனர். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீஸில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சமாதானபுரம் கணபதி மகன் கார்த்திகேயன் (35) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். மருந்து விற்பனை பிரதிநிதியான அவர், விற்பனைக்கு வைத்திருந்த மருந்து, மாத்திரைகள் காலாவதியானதால் அவற்றை ரெட்டியார்பட்டி அருகே நான்குவழி சாலையையொட்டி கொட்டியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

x