திருவாரூர்: லாரி மார்க்கெட்டில் லாரிகளில் டீசல் திருடிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் உட்பட 5 போலீஸார் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
திருவாரூர் பழைய தஞ்சாவூர் சாலையில் உள்ள லாரி மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரியில் இருந்து தொடர்ந்து டீசல் திருடு போவதாக அந்நிறுவன மேலாளர் அசோக்குமார் 5 நாட்களுக்கு முன்பு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் ஆய்வாளர் ராஜூ உள்ளிட்ட போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, லாரியில் டீசல் திருடியதாக அடியக்க மங்கலத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் (34), பஜ்ருல் ஷேக் (30) ஆகியோரை கைது செய்தனர்.
ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்காததுடன், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர். இது தொடர்பாக பழைய தஞ்சாவூர் சாலை லாரி ஷெட் யூனியன் சார்பில் திருவாரூர் மாவட்ட எஸ்.பி. கரூண் கரட்-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. கரூண் கரட் விசாரணை நடத்தி, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ராஜு, தனிப் படையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பூபதி, தலைமைக் காவலர்கள் ஜானி, பிரபு, அருள் ஆகிய 5 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் சரக டிஐஜி அலுவலகம் மூலம் 5 பேரிடமும் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதன்பேரில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.