நாகை - இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி!


நாகை: தமிழகத்தின் நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து, நாளை (பிப்.12) மீண்டும் தொடங்குகிறது.

தமிழகத்தின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகம் வரை 2023, அக்.14-ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழைப் பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த சேவை அதே மாதம் 23-ம் தேதி நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு, சுபம் என்ற கப்பல் நிறுவனம், ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆக.16-ம் தேதி முதல் நாகை- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டு இந்த பயணிகள் கப்பல் சேவை பிப்.12-ம் தேதி தொடங்க உள்ளதாக சுபல் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என்றும், டிக்கெட்களை www.sailsubham.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

x