தஞ்சை: நெல் கொள்முதல் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
எடை இழப்பை காரணம் காட்டி வேலை பறிக்கப்பட்ட கொள்முதல் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும். கொள் முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 60 வயது என்ற வரம்பை ரத்து செய்ய வேண்டும். எடை குறைவு தொகை வசூலிப்பதற்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள 25 லட்சம் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.12-ம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் மண்டல அலுவலகத்தில் நேற்று தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மண்டல மேலாளர் புகாரி விடுத்த அழைப்பை ஏற்று, ஏஐடியுசி சி.சந்திரகுமார், சிஐடியு அண்ணாதுரை, ஐஎன்டியுசி பாண்டியன், தொமுச நீலமேகம், அண்ணா தொழிற்சங்கம் பால சுப்பிரமணியன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதில், எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி நாளை(பிப்.12) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.