பழநி: பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக பொது சுகாதாரத் துறை சார்பில் 41 இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து கால்வலி தைலம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன.
தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வருகின்றனர். பல கி.மீ. தொலைவுக்கு நடந்து வரும் பக்தர்கள் கால்வலி, மூட்டு வலி, முதுகு வலி மற்றும் உடல் அசதியால் தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்வு அடைகின்றனர். பக்தர்களின் உடல் வலியை போக்கி புத்துணர்வுடன் யாத்திரை செல்ல வசதியாக பொது சுகாதாரத் துறை சார்பில் திண்டுக்கல் முதல் பழநி வரை 41 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இங்கு பாதங்கள், மூட்டு வலிக்கு தைலம் வழங்குவதோடு, பக்தர்களின் கால்களுக்கு மசாஜ் செய்து விடுகின்றனர். உடல் சோர்வு, தலைவலி மற்றும் காயங்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்குகின்றனர். ஏராளமான பக்தர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது தவிர, பழநி கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவீதி மற்றும் படிப்பாதைகளில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன.