பணி நிரந்தர கோரிக்கை - டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணி, கைது!


சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.

டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக எழும்பூர் எல்.ஜி.சாலையில் இன்று காலை ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து, அவர்கள் பேரணி செல்ல முயன்ற நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: ''டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேசியபோது, கோரிக்கையை நிராகரிக்காமல் பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். அதிகாரிகளுடம் பேசும்போது, அரசு தான் முடிவெடுக்கும் என்றனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட வருவோரை கைது செய்கின்றனர். வீட்டிலேயே கைது செய்து வைத்திருக்கின்றனர்.

மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் வாங்குவோருக்கு வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் இத்துறையில் ரூ.11 ஆயிரம் தாண்டி ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்களும் குடும்பம் நடத்த வேண்டுமல்லவா. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அழைத்து பேசினால் தான் என்ன. பணி நிரந்தரத்தை அரசு மறுக்கலாமா. போராட்டம் நடத்தினாலும் காவல்துறை மூலம் மிரட்டி அச்சுறுத்த முயற்சிகின்றனர். இதையெல்லாம் மீறி போராட்டக்காரர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்களே. அப்போது நிர்வாகம் தோற்றி விட்டது என்று தானே அர்த்தம். எப்போதும் தொழிலாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.'' இவ்வாறு அவர் பேசினார்.

ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசும்போது, "தொழிலாளர் நலனில் பாஜக அரசுக்கும் திமுக அரசுக்கும் வேற்றுமை இருக்க வேண்டும். அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். ஆனால் இப்போது போராட்டத்துக்கு வருவோரை சுங்கச்சாவடிகளில் வைத்து கூட கைது செய்கின்றனர்" என்றார்.

பேரணியில், ஏஐடியுசி மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் தனசேகரன், முத்துப்பாண்டி, மாயாண்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

x