நாமக்கல்லில் சோகம்: தெரு நாய்கள் கடித்ததில் 3 வயது சிறுமி உட்பட 7 பேர் காயம்


நாமக்கல்: தொட்டிப்பட்டியில் தெரு நாய்கள் கடித்ததில், 3 வயது சிறுமி உட்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நாமக்கல் மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தும், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நாமக்கல் தொட்டிப்பட்டியில் நேற்று வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த முருகவேல் என்பவரின் 3 வயது மகளை, 10-க்கு மேற்பட்ட நாய்கள் கடித்து குதறின. நாய்களிடமிருந்து சிறுமியை மீட்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கடித்ததில், காயம் அடைந்தனர். இதையடுத்து, சிறுமி உட்பட 7 பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

x