புதுச்சேரி: 9 ஆண்டுகளாக அமைக்கப்படாத சூழலால் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரம் உயர தரப்படும் நிதியுதவி உட்பட பல விஷயங்கள் நடக்காததால் புதுச்சேரியில் உடனடியாக வக்புவாரியம் அமைக்கக்கோரி ஆளுநரிடம் அதிமுக மனு தந்துள்ளது.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் இன்று சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 'புதுவையில் கடந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2016ல் வக்பு வாரிய தலைவர் பதவி காலம் முடிவடைந்தது. 9 ஆண்டுகளாக வக்பு வாரியம் அரசால் அமைக்கப்படவில்லை. வக்பு வாரியத்துக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் புதுவை அரசு இன்று வரை தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை.
வக்பு வாரிய நிர்வாக கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கூடிய பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ராசிகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் (முத்தவள்ளிகள்) அனைவரின் பதவிக்காலமும் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகியும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய முடியவில்லை. முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்காக மத்திய வக்பு கவுன்சில் மூலம் வழங்கப்படும் நிதி உதவி பல ஆண்டுகளாக வழங்கவில்லை.
வக்பு வாரிய சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. சொத்துக்களை மிக குறைந்த வாடகைக்கு பல ஆண்டுகளாக குறிப்பிட்ட ஒரு சிலர் அனுபவித்து வருகின்றனர். ஏழை எளிய முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எவ்வித உதவியும் வக்பு வாரியத்தால் செய்யப்படவில்லை. எனவே துணைநிலை ஆளுநர் உடனடியாக வக்பு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.