விபத்தில் காயமடைந்தவர் வைத்திருந்த ரூ.5.62 லட்சத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: சேலம் நெகிழ்ச்சி


சேலம்: சேலத்தில் சாலை விபத்தில் காயமடைந்த டாஸ்மாக் கண்காணிப்பாளர் வைத்திருந்த ரூ.5.62 லட்சத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவத்தை மக்கள் வெகுவாக பாராட்டினர்.

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்தவர் மகுடேசன் (54). டாஸ்மாக் கண்காணிப்பாளர். இவர் நேற்று முன்தினம் நண்பர் குழந்தைவேலு (66) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கொண்டலாம்பட்டியில் இருந்து வேம்படிதாளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மகுடேசன், குழந்தைவேலு இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளரான மாசி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த நடேசன், ஓட்டுநர் ஆதிசேஷன் ஆகியோர் காயமடைந்த இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது, மகுடேசன் டாஸ்மாக் கடை வசூல் பணம் ரூ.5.62 லட்சம் வைத்திருந்ததை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு பத்திரமாக வைத்திருந்தனர்.

பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து, மருத்துவர்கள் முன்னிலையில் மகுடேசனின் உறவினர்களிடம் ரூ.5.62 லட்சத்தை ஒப்படைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

x