ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து: சேலம் ஆட்சியர் எச்சரிக்கை


ஆட்சியர் பிருந்தாதேவி

சேலம்: உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தினால் ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. ஜவ்வரிசியானது, மரவள்ளிக் கிழங்குகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஜவ்வரிசி தயாரிப்பின்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய, உணவு தரத்தில் இல்லாத சல்பியூரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம் ஹைப்போ குளோரைடு ஆகிய வேதிப்பொருட்களை ஒரு சிலர் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளன.

இவ்வாறு அனுமதிக்கப்படாத உணவு தரத்தில் இல்லாத வேதிப்பொருட்களை கலந்து ஜவ்வரிசி தயாரிப்பது பாதுகாப்பற்ற உணவாக கருதப் படுகிறது. இந்த செய்கையானது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்படி அதிகபட்சம் 3 மாதம் சிறை தண்டனையுடன், ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படக்கூடிய தண்டனைக்குரிய குற்றம். மேலும், ஜவ்வரிசி தயாரிப்பின்போது சுகாதாரமற்ற தண்ணீர் பயன்படுத்தப் படுவதாகவும் ஆய்வில் அறியப்படுகிறது.

உற்பத்தியாளர்கள், ஜவ்வரிசி தயாரிப்பின்போது மக்காச்சோள மாவு கலப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. சேகோ (Sago) என பெயரிடப்பட்ட உணவுப்பொருட்களில் மக்காச்சோள மாவு கலந்து, சேகோ என விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு, அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பொட்டலமிட்டு விற்பனை செய்யும்போது, அவற்றின் மீது முழு விவரங்கள் அடங்கிய விவரச்சீட்டு அச்சிடப்பட்டு, விற்பனை செய்யப்பட வேண்டும். இதேபோன்று விற்பனையாளரும், முழு விவரங்கள் அடங்கிய விவரச்சீட்டு கொண்ட உணவுப்பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத் துறையால், அவை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையார்கள் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் பெற்ற பிறகே உணவு வணிகம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் ஜவ்வரிசி ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்வதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

x