அரசு பேருந்து இருக்கையில் அரிவாள் போட்டு இடம்பிடித்த நபர்கள்: பொள்ளாச்சி பரபரப்பு


பொள்ளாச்சி: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க இயக்கப்பட்டு வருகின்றன.

காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் நிலையில், பயணிகள் தங்கள் கையில் வைத்துள்ள குடை, புத்தகம், கைப்பை. கைக்குட்டை உள்ளிட்ட பொருட்களை இருக்கையில் போட்டு இடம் பிடிப்பது வழக்கம். இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் செல்லும் (வழித்தடம் எண் 5சி) அரசு பேருந்தின் இருக்கையில் நேற்று 2 அரிவாள்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து, இருக்கையில் அமராமல் பயத்துடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வைரலானது. தகவலறிந்து கிழக்கு காவல்நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், தேங்காய் பறிக்கும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அரிவாள்களை வைத்து பேருந்தில் இடம்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x