கோவையில் ஒற்றை யானையை விரட்ட கும்கி யானை ‘சின்னத்தம்பி’ வரவழைப்பு!


கோவை: கோவையில் ஒற்றை யானையை விரட்ட வந்த இரு கும்கி யானைகளுக்கும் மதம் பிடித்ததால் ஆனைமலை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ‘சின்னத்தம்பி’ என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், பன்னிமடை, சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த ஒற்றை யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். இதனால் ஒற்றை யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து முத்து, சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடந்த வாரம் சுயம்பு என்ற கும்கி யானைக்கு மதம் பிடிப்பது தெரியவந்ததையடுத்து, டாப் சிலிப் யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், முத்து யானைக்கும் மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி முத்து யானை, டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இரண்டு கும்கிகளும் முகாமுக்கு திரும்பியுள்ளதால், டாப்சிலிப் முகாமில் நல்ல நிலையில் உள்ள கும்கி யானை சின்னத்தம்பி அழைத்து வரப்பட்டுள்ளது. தற்போது சின்னத்தம்பி வரப்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்டு, ஒற்றை யானையை கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த ‘சின்னத்தம்பி’ யானை, அங்கிருந்து இடம்பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் ‘கும்கி’யாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x