சென்னை: அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு மாறத் தொடங்கிவிட்டன, பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் 4 ஆண்டுக்கால ஆட்சியில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை, ஆதரவு அலைதான் வீசுகிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 34 ஆயிரத்து 817 வாக்குகளை பெற்றது. அந்த வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அதிமுக தொண்டர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். எப்போதும் வேறு யாருக்கும் ஓட்டு போடாத மாற்றுக்கட்சிக்காரர்கள் கூட திமுகவுக்கு வாக்களித்திருக்கின்றனர். அந்த வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.
பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்பு 11 முறை தோல்வியடைந்துள்ளார். இதிலிருந்து அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லோருமே வெறுப்புடன் இருக்கின்றனர். கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுகளில் இருந்து தெரியவருகிறது. கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டுகொண்டிருக்கிறார்.
சீமான் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்துக்கு சென்று அங்கே வழக்கு நடத்தலாம். கைது செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகி குற்றவாளி அல்ல, அவதூறாகப் பேசவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். நீதிமன்றம் அதை பார்த்துக் கொள்ளும்.
தமிழகத்தில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையாகத்தான் உள்ளனர். மத கலவரத்தை உருவாக்க யார் நினைத்தாலும் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம. நாங்கள் அனைவரையும் சமமாக பார்க்கிறோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றம்சாட்டு பொய்யானது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு தைரியம் வந்துள்ளது, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்திலோ காவல் நிலையத்திலோ புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய காலம் இதுதான் என்பதை உணர்ந்து பெண்கள் புகார் கொடுக்க முன் வந்திருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.