கோவை: கேரளாவில் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்த நபர் கோவை விமான நிலையத்தில் சிக்கினார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேபி என்ற மூதாட்டியும், அவரது பேத்தி த்ரிஷ்னா(9) என்பவரும் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூதாட்டி பேபி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ‘கோமா’ நிலைக்குச் சென்றார். விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் சென்று விட்டது.
கோழிக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்தனர். கேரள உயர் நீதிமன்றம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவை இச்சம்பவம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தன. விபத்தை ஏற்படுத்திய காரை கண்டறிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன் இறுதியில் விபத்தை ஏற்படுத்திய கார் ஷஜீல் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. தனது குடும்பத்தினருடன் பயணித்த போது விபத்து ஏற்பட்டதும், பின்னர் அவர் துபாய்க்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவரை பிடிக்க, காவல்துறையினர் விமான நிலையங்களில் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஷஜீல் விமானம் மூலம் கோவைக்கு நேற்று அதிகாலை வருவதாக கேரள காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் துறையினர் கோவை விமான நிலையத்துக்கு சென்று காத்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து கோவைக்கு திரும்பிய ஷஜீலை விமான நிலைய குடியுரிமை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பிடித்து, கேரள காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.