தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ நடத்​தும் போராட்​டத்​தில் பங்கேற்​போம்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு


கோப்புப் படம்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் தீனதயாள், மாநில பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் திருச்சியில் கடந்த 4-ம் தேதி அன்று நடைபெற்ற உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 14-ம் தேதி வட்டார அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 25-ம் தேதி மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

011.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

மேற்கண்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பங்குபெறுவர். தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

x