முதல்வர், பேரவை தலைவர் முன்னிலையில் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக சந்திரகுமார் உறுதியேற்பு


ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், பேரவை தலைவர் அப்பாவு முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அவர் நேற்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், தலைமைச் செயலகத்தில் பேரவை தலைவர் அப்பாவு அறையில் சட்டப்பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை கொறடா ராமச்சந்திரன், கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது: 234 தொகுதி மக்களின் மனநிலையைதான் ஈரோடு கிழக்கு தொகுதி பிரதிபலித்துள்ளது. அதனால், இந்த வெற்றி 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும். ஈரோடு கிழக்கில் இந்த ஓராண்டு காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளை ஆய்வு செய்து, அவற்றை தொடர்ந்து மேற்கொள்வேன்.

பெரியார் தவறு செய்திருந்தால் சுட்டிக் காட்டலாம். ஆனால், பெண் சமுதாயம் உட்பட ஒட்டுமொத்த தமிழரின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த பெரியாரை நேற்று பாராட்டிவிட்டு இன்று அரசியல் ஆதாயத்துக்காக, ஆர்எஸ்எஸ் பாசிச கும்பல் வகுத்து கொடுத்த திட்டங்களை செயல்படுத்த, பெரியார் பிறந்த ஈரோட்டிலேயே அவரை விமர்சித்த சீமான் மனித பிறவியாக இருக்க முடியாது. அவர் ஒரு மோசமான அருவருக்கத்தக்க அரசியல்வாதி.

எலுமிச்சம்பழம் ஏன்?- பெரியார் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான். அதற்காக இறைபக்தி இல்லாதவன் அல்ல. கையில் எலுமிச்சம்பழம் வைத்துக் கொண்டு நான் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறுகின்றனர். அந்த பழத்துக்கும், கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. தவிர, மனு தாக்கல் செய்யும்போது கையில் எலுமிச்சம்பழம் இல்லை. மேஜையில் வைத்துவிட்டுதான் வேட்புமனு தாக்கல் செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

x