கைத்தறித் துறையில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், பாஜக ஆட்சிக்கு வரும்போது அமைச்சர் காந்தி முதல்நபராக சிறைக்குச் செல்வார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் காந்தி. கடந்த ஆண்டு வேட்டி நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் பருத்தி நூலை குறைவாகவும், அதில் பாதி விலையான பாலியஸ்டர் நூலை அதிகமாகவும் வாங்கி வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
இதனை, தமிழக பாஜக சார்பில் கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து, மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர், வெறும் 22 சதவீதம் மட்டுமே காட்டன் இருப்பதைக் கண்டறிந்து உற்பத்தி செலவில் மிகப்பெரிய ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வேட்டியும், ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அதேபோல், இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில் ஊழல் நடந்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்கு செல்லவிருக்கும் முதல்நபராக காந்தி இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது