வேங்கைவயல் விவகாரத்தில் நீதி விசாரணை ஆணையம் அமைக்க கோரி முதல்வரிடம் திருமாவளவன் மனு


வேங்கைவயல் விவகாரத்தில் நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசிக தலைவர் திருமாவளவன் மனு அளித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவின் பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், தொடர்ந்து முதல்வரை சந்தித்து வேங்கைவயல் விவகாரத்தில் நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும், பட்டியலினத்தவருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடுக்கான சட்டம் இயற்ற வேண்டும் உட்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பெரியார் என்னும் அடையாளத்தை சிதைத்து விட்டால் திராவிட அரசியலின் வேரை வெட்டி வீழ்த்த முடியும் என ஒரு கும்பல் நம்புகிறது. இதற்காக ஆட்களை தேர்வு செய்து பெரியாருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நிறுத்துகிறது. ஆனால் இதுவரை அவர்களால் பெரியாரை வெல்ல முடியவில்லை. இந்த மண்ணில் பெரியாரின் அரசியலை எவராலும் அசைத்து பார்க்க முடியாது. அது சமூக நீதி பேசும் அரசியலாகும். இடைத்தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள், தமிழகம் பெரியாரின் சமூக நீதி அரசியலுக்கான தேசம் என்பதை மீளுறுதி செய்திருக்கிறது. இத்தேர்தலில் ஆண்டகட்சி, வலுவான எதிர்கட்சி அதிமுக ஈரோடு போட்டியிடாமல் பின்வாங்கியதுக்கும் அக்கும்பலின் சூழ்ச்சி தான் காரணம். இத்தேர்தல் மூலம் இவர்களது மறைமுக கூட்டணி அம்பலப்பட்டு இருக்கிறது. ஆனாலும் தேர்தலின் வழியாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் ஈரோடு தொகுதி மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். .

வேங்கை வயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை இறுதியானது அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே குற்றப்பத்திரிக்கை அமைந்திருப்பது தமிழகம் முழுவதும் இருக்க கூடிய பட்டியலின மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை கொண்டு நீதி விசாரணை அமைக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் பெருகி வருகிறது. அவற்றை தடுக்கவும் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

x