பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: சீமானுக்கு வடலூர் போலீஸார் சம்மன்


பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்.14-ம் தேதி வடலூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜன.8-ம் தேதி வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற சீமான், செய்தியாளர்களிடம் பேசும்போது, பெரியார் பற்றி சர்ச்சையான சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட இயக்க ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம், வடலூரில் பெரியார் பற்றி சீமான் பேசியது தொடர்பாக புகார் மனு ஒன்றை, ஜன.9-ம் தேதி அளித்தார்.

அதன் அடிப்படையில், பொது இடத்தில் அமைதியை குறைக்கும் விதமாக பேசுதல், இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சீமான் மீது வடலூர் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு நேற்று சென்ற வடலூர் போலீஸார், இந்த வழக்கு தொடர்பான சம்மனை வழங்கினர். அதில், பிப்.14-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது

x