புதுச்சேரி தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட களம் வகுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்!


கோப்புப்படம்

புதுச்சேரி: வரும் 2026 பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட புதுச்சேரியில் களம் வகுக்க இந்திய கம்யூனிஸ்ட் தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் வரும் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பணிகளைத் துவக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறாத சூழல் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் சில தொகுதிகளை குறிவைத்து பணிகளை துவங்குவதாக பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சலீமிடம் கேட்டதற்கு, “கட்சியில் கலந்து ஆலோசித்து உள்ளோம். 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை குறிவைத்து தயாராகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையில் 3 தொகுதிகள் கேட்போம். இதற்கு இந்த ஒரு ஆண்டு செயல்படவுள்ளோம். 2026 தேர்தலில் இண்டியா கூட்டணியில் 3 தொகுதிகளை குறிவைத்து போட்டியிடுவோம். அதை சில நாட்களில் சொல்வோம்.

இண்டியா கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்க உள்ளோம். புதுச்சேரியில் இண்டியா கூட்டணியை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். பல போராட்டங்களை முன்வைத்தோம். இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் குறைந்தப்பட்சம் 3 தொகுதிகளை கேட்டு பெறவுள்ளோம். அதில் நிற்க அனைத்து வேலைகளையும் செய்ய மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். வரும் ஒரு மாதத்தில் இதற்கான நிலை எடுத்து தேர்தல் கண்ணோட்டத்தில் வாக்காளர்களை சந்திக்க உள்ளோம்.

மக்கள் மத்தியில் அறிந்த முகம் தேவைப்படுவதால் முன்கூட்டியே போட்டியிடும் 3 தொகுதிகளின் வேட்பாளர்களை கட்சிக்குள் அடையாளம் காட்டி செயல்படுவோம். சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் செயல்பாடு அனைவருக்கும் தெரியும். 2026 தேர்தலில் போட்டியிட அமைப்பு பலத்தை உருவாக்கி வருகிறோம். நிச்சயம் தொகுதிகளை கேட்டுபெறுவோம்.

பாஜகவுக்கு மாற்று இண்டியா கூட்டணிதான். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியுள்ளோம். ரேஷன்கடை பிரச்சினை தொடங்கி பல பிரச்சினைகளை முன்வைத்தோம். தற்போது மதுபான பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றார்.

x