மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவாகரத்தில் அதிமுக கட்சி பெயரை தவறாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில் பாஜக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கேசவராஜ் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை குறித்து சில நாட்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆட்சியரை சந்தித்து அதிமுக பிரமுகர் மோகன்தாஸ் என்பவர் ஒரு மனு அளித்தார். அதில், அவர் தன்னை கவிஞர். ப.மோகன்தாஸ், திருப்பரங்குன்றம் அதிமுக பகுதிச் துணை செயலாளர் என தனது பொறுப்பை குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.மேலும் அவர் கட்சிக் கரையுடன் கூடிய துண்டு அணிந்து இருந்தார்.
அவரது மனுவில் இணைத்த வாக்காளர் அடையாள அட்டை ஆவணங்களில் தனது பெயர் முகமது இஸ்காக் என்பதை மறைத்து மோகன்தாஸ் என, போலியாக கையெழுத்திட்டு இருப்பது தெரிகிறது. அனைத்து கட்சி சார்பில், திருப்பரங்குன்றம் பகுதி நிர்வாகிகள் ஆட்சியரிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் தான் ஜன.30-ல் ஆர்டிஓ தலைமையில் அமைதிக் கூட்டம் நடந்துள்ளது. இதில் முகமது இஸ்காக் என்பவர் மீண்டும் கையெழுத்திட்டுள்ளார்.
இதைத்தான் ஆட்சியர் தனது செய்தி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மோகன்தாஸ் யார் என்றே தெரியாது என்று அதிமுகவினர் கூறுகின்றனர். அந்த நபர் ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தர்கா பள்ளிவாசலில் கட்டிட நிதி வழங்க திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன்செல்லப்பா உடன் சென்றுள்ளார். தன்னை திருப்பரங்குன்றம் பகுதி துணைச் செயலாளர் என, பதவியை குறிப்பிட்டு மனு அளித்தவர் மீது அதிமுக கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதொடர்பாக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சுயலாபத்துக்காக ஆட்சியர் வேண்டுமென்றே பொய் அறிக்கை வெளியிட்ட தாகவும், ஆட்சியர் மீது வழக்கு தொடர்வோம் என்றும் கூறியிருக்கிறார். முகமது இஸ்காக் என்ற தனது பெயரை மோகன்தாஸ் என மறைத்து கையெழுத்திட்ட நபர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் மீது வழக்கு பதிய வேண்டும்,’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.