ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 500 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஜான்போஸ், சுதன் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், வடக்கு மன்னார் கடல் பகுதியில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், படகுகளில் இருந்த ஜான் போஸ், அந்தோணி, நிலாகரன், நிகிதன், சேசு பூங்காவனம், சந்தியா, கார்லோஸ், நிஷாந்த், டூவிஸ்டன், அய்யாவு, அந்தோணி டிமக், அருளானந்தம், ஜெலஸ்டின், ஆரோன் ஆகிய 14 மீனவர்களையும் கைது செய்து, இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் நேற்று காலை ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கிளிநொச்சி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அண்ணாமலை கடிதம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையின் அண்மைக்கால நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துகின்றன. இரு தினங்களுக்கு முன் ராமேசுவரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் புதிய அதிபராக அனுர குமர திசநாயக பொறுப்பேற்ற நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்தஅக்டோபர் மாதம் முதல் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மீனவர்களின் படகு ஏலம்: கடந்த 2022 டிசம்பரில் நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஃபைபர் படகில் சென்ற 4 மீனவர்களை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடல் பகுதியில் அந்நாட்டு மீனவர்கள் சிறைபிடித்து, இலங்கை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், 4 பேரையும் விடுதலை செய்த பருத்தித் துறை நீதிமன்றம், அவர்கள் வந்த ஃபைபர் படகையும், அதில் இருந்த மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி, ஜிபிஎஸ் கருவி
உள்ளிட்டவற்றையும் நாட்டுடமையாக்கியது. இந்நிலையில், ஃபைபர் படகு உள்ளிட்ட அனைத்தும் பருத்தித் துறை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை ரூபாய் 5.60 லட்சத்துக்கு (இந்திய மதிப்பில் ரூ.1.65 லட்சம்) பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஏலம் மூலம் படகு விற்பனை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.