பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் மகளிர் உச்சம் தொட முடியும்: இந்திய விமானவியல் நிறுவன முதன்மை மேலாளர் அறிவுரை


மெல்லினம் இதழ் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும்  மகளிருக்கு 'மெல்லினம் விருது" வழங்கும் விழா சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விமானவியல் நிறுவன முதன்மை மேலாளர் க.செல்வி, நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்று சாதனை மகளிருக்கு விருதுகளை வழங்கினர். உடன் இதழின் ஆசிரியர்  ராஜவேல் வீரப்பெருமாள். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: மகளிர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்றினால் வாழ்வில் உச்சம் தொட முடியும் என இந்திய விமானவியல் நிறுவன முதன்மை மேலாளர் க.செல்வி தெரிவித்துள்ளார்.

'மெல்லினம்' இதழ் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் மகளிருக்கு 11-வது ஆண்டு 'மெல்லினம் விருது' வழங்கும் நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விமானவியல் நிறுவன முதன்மை மேலாளர் க.செல்வி, நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் சாவித்திரி, வசந்தா குமார், யாஸ்மின் பவுசியா இம்ரான், செ.ஹரிணி, செல்வவதி சரவணன், சித்ரா வெங்கட்ராமன், இரா.விஜயலட்சுமி, ரிபப்ளிக்கா, சவும்யாஸ்ரீ, கிரேஸ் பானு, சீதாலட்சுமி மணிகண்டன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். பின்னர் இந்திய விமானவியல் நிறுவன முதன்மை மேலாளர் க.செல்வி நிகழ்ச்சியில் பேசியதாவது:

மகளிர் தங்கள் வாழ்க்கை சூழல்களை எதிர்கொள்ளும்போது, அவர்களது கருத்தை வலுவாகவும், திடமாகவும் தெரிவித்தால் தான் நமக்கான உரிமைகளை பெற முடியும். நான் இந்திய அரசின் போர் விமான தயாரிப்பு (HAL) நிறுவனத்தில் 24 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். போர் விமானங்கள் தயாரிப்பில் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அப்போது தான் உலக அளவில் பிற நாட்டு போர் விமானங்களோடு போட்டியிட முடியும். அந்த பொறுப்பை உணர்ந்து நான் பணியாற்றி வருவதால் இப்போது ஹெச்ஏஎல் நிறுவன முதன்மை மேலாளராக உயர்ந்திருக்கிறேன். அதனால் மகளிர், தாங்கள் சார்ந்த துறையில் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால், அவர்களின் வாழ்வில் உச்சத்தை தொடமுடியும்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு யாரேனும் உதவி இருக்கலாம். அந்த உதவி கிடைக்காவிடடாலும் அவர்கள் உயர்ந்திருப்பார்கள். அதனால் மகளிர் அவர்களின் திறமையை அங்கீகரிக்க வேண்டும். மகளிருக்கு இங்கு மெல்லினம் என்ற விருது வழங்கப்படுகிறது. மெல்லினம் என்பது மகளிரின் குணம் இல்லை. இன்று முப்படைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். மெல்லினம் என்பது மகளிரின் ஒரு முகம் மட்டும் தான். அதை கடந்து மகளிருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. மகளிருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். அதையும் தாண்டி பொதுப்பிரிவில் இடம்பெறும் வகையில் உழைக்க வேண்டும். மெல்லினம் இதழ், இதழை மட்டும் நடத்தாமல், சாதனை பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன் பேசும்போது, "இன்று ஆணை விட பெண்கள் மிக உச்சத்தில் உள்ளனர். பெண்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. இருப்பினும் இன்றும் சரியான ஊதியம் கிடைக்காதது, பணியிடத்தில் பாதுகாப்பின்மை போன்ற சிக்கல்கள் இருந்து வருகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு அவர்கள் பொருளாதார பலம், அறிவு பலம் பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் தடைகளை உடைத்து உச்சம் தொட முடியும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் மெல்லினம் இதழ் ஆசிரியர் ராஜவேல் வீரபெருமாள், பொறுப்பாசிரியர் பவானி, நிர்வாக ஆசிரியர் ஆ.வீ.முத்துபாண்டி, முன்னாள் பேராசிரியர் ஜி.உமாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x