தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில் வயர்மேன் உள்ளிட்ட நிலைகளில் சுமார் 39 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக ஆர்டிஐ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள், கள உதவியாளர் வரையிலும் காலியிடம், எண்ணிக்கை விவரங்களை மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என்ஜி.மோகன் ஆர்டிஐ மூலம் கேட்டிருந்தார். இதற்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து மின்பகிர்மான அலுவலகங்களிலும் களப்பணியாளராக பணிபுரியும் கேங்மேன் பிரிவில் 626 பணியிடங்களும், கள உதவியாளர் பிரிவில் 25 ஆயிரத்து 551 பணியிடமும், கம்பியாளர் (வயர்மேன்) பிரிவில் 13 ஆயிரத்து 216 பணியிடங்களும் என, 3 பணிப்பிரிவுகளிலும் மொத்தம் 39 ஆயிரத்து 393 காலியிடங்கள் இன்னும் நிரப்படாமல் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
தமிழக அளவில் 3 பிரிவில் மட்டுமே சுமார் 39 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் மின் பழுது நீக்கம் போன்ற மின் சேவை பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் என்ஜி.மோகன் கூறியதாவது: “முக்கிய பணியான வயர்மேன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மின்வாரியம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளும் தீர்ந்துவிடும். மின்வாரியத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் மின் கம்பங்களில் ஏறி பழுது நீக்கும் பணியால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம்.
தமிழக அரசு தலையிட்டு காலிபணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் தற்போது பணியிலுள்ள வாரிய ஊழியர்களும் பணிச்சுமை குறையும்” இவ்வாறு அவர் கூறினார்.