புதுச்சேரி சூழல்: ஆளுநர், முதல்வருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை


புதுச்சேரி: புதுச்சேரி சூழல் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோரை மத்திய இணை அமைச்சர் முருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் இன்று புதுச்சேரி வந்தார். அவர் பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது புதுச்சேரி நிதி, நிதி கமிஷனில் புதுச்சேரி சேர்க்காதது, கடன் தள்ளுபடி செய்யாதது உட்பட பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டதால் பாதியில் புறப்பட்டார். அதைத்தொடர்ந்து ராஜ் நிவாஸ் சென்று துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து பல முக்கிய விஷயங்கள் தொடர்பாக பேசினார்.

புதுச்சேரி விஷயம் தொடர்பாக இருவரும் கலந்து ஆலோசித்தனர். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநிலத்தலைவர் எம்பி செல்வகணபதி ஆகியோர் இருந்தனர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை மத்திய அமைச்சர் சந்தித்து பேசினார்.

அப்போது மத்திய நிதி நிலை அறிக்கைக்கும், புதுடெல்லி சட்டப்பேரவை வெற்றிக்கும் வாழ்த்துகள முதல்வர் தெரிவித்தார். சந்திப்பின் போது பேரவைத் தலைவர். செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார், பாஜக மாநிலத் தலைவர் செல்வ கணபதி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்புக்குப் பிறகு அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

அடுத்தாண்டு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள சூழலில், புதுச்சேரி சூழல் தொடர்பாக கட்சி முக்கிய நிர்வாகிகளை பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் முருகன் கலந்து ஆலோசித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

x