“மக்களவைத் தேர்தலுக்கு பின்பு இண்டியா கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
இது குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”டெல்லி தேர்தல் முடிவு வருத்தம் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின்பு இண்டியா கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகவே பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதுபோல, பிற மாநிலங்களில் இல்லை.
இந்திய அளவில் இண்டியா கூட்டணி வலுப்பெற கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்யும். தமிழகத்தில் பல தேர்தல்களில் அத்துமீறல், முறைகேடுகள் தொடர்கின்றன. இந்நிலை மாறி, நேர்மையான, ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டும். மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசியலில் பிரபலமானவர்கள் பலர் வந்து, சென்றுள்ளனர். அதுபோல நடிகர் விஜய் வந்துள்ளார். அதிமுக, திமுகவை விரும்பாதவர்கள் அவரை விரும்புவர். ஆனால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வருவார் என்று கருத முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.