மதுரை: இண்டியா கூட்டணி தலைவர்கள் ‘ஈகோ’ பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "டெல்லி தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது தேசத்துக்கு பின்னடைவாகும். தேர்தல் நியாயமாக நடந்ததா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்காததால் இத்தோல்வி ஏற்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி ஒற்றுமையாக, கட்டுக் கோப்பாக இல்லை. கூட்டணி தலைவர்கள் ‘ஈகோ’ பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தனி உளவுப் பிரிவை உருவாக்கி, தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வட மாநிலங்களைப் போல தமிழகத்தில் மதப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காத பாஜக, கோயில், மசூதி பிரச்சினைகளைத் தூண்டி, அரசியல் ஆதாயம் தேடுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நிலைப்பாடே திருப்பரங்குன்றத்தில் பதற்றத்துக்கு காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.