ஈரோடு: நாம் தமிழர் கட்சியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகள் நாதகவுக்கு கிடைத்துள்ளன என்று ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று வி.சி.சந்திரகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்த வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும்தான். இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, அவர்களுடைய வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு அச்சாரமாக திமுக ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி அமைந்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடாததால் எங்களுக்கு எதிரான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது. நாதக வேட்பாளர் தோல்விக்கு பின் ஜனநாயகம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முன்பாகவும் ஆளுங்கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத போது, வேறு ஒரு நபர் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெறுவார். இப்படியான சம்பவங்கள் முன்பும் நடந்திருக்கிறது. இதனால் நாதக பெற்றுள்ள வாக்குகள் விபத்துக்கு சமம்.
இதனால் நாதகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று சொல்ல தேவையில்லை. இதனை வாக்கு வங்கியாக நினைத்து அரசியல் செய்தால், அவர்கள் இன்னும் பெரிய தோல்வியை சந்திப்பார்கள். எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கக் கூடிய மக்கள் கூட எங்களுக்கு வாக்களித்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி இது. நாம் தமிழர் கட்சியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். திமுக எந்த காலத்திலும் யாருக்கும் அஞ்சியதில்லை” என்று அவர் கூறினார்.
இதனிடையே, 12-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 83324 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 17692 வாக்குகள் பெற்றுள்ளார்