திண்டுக்கல் டிஐஜியாக பொறுப்பேற்ற வந்திதா பாண்டே ஒரு மாதத்தில் பணியிட மாற்றம்!


வந்திதா பாண்டே

திண்டுக்கல்: திண்டுக்கல் டிஐஜி பணியிடம் 4 மாதங்களாக காலியாக இருந்த நிலையில், கடந்த மாதம் டிஐஜியாக நியமிக்கப்பட்ட வந்திதா பாண்டே ஒரு மாதமே பணியாற்றிய நிலையில் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் டிஐஜியின் கீழ் தேனி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறையினர் பணிபுரிந்து வருகின்றனர். திண்டுக்கல் டிஐஜி பணியிடம் 4 மாதங்களாக காலியாக இருந்தது. கூடுதல் பணியாக மதுரை டிஐஜி, ஐஜி ஆகியோர் திண்டுக்கல், தேனி மாவட்ட காவல் துறை விவகாரங்களை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரியில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய வந்திதா பாண்டே, பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் ஜனவரி 3-ம் தேதி திண்டுக்கல் டிஐஜியாக பொறுப்பேற்றார். முதல் கட்டமாக திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். 2 மாவட்டங்களையும் முழுமையாக புரிந்துகொண்டு பணியை தொடங்குவதற்கு முன்னரே இவர், மத்திய அரசு பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் மீண்டும் திண்டுக்கல் டிஐஜி பணியிடம் காலியாக உள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி, முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் வர்த்தக பகுதியாக திகழும் திண்டுக்கல்லில் காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் வழிகாட்டுதலை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இதை கருத்தில் கொண்டு திண்டுக்கல் டிஐஜி பணியிடத்தில் உடனடியாக நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x