கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளதால், எஸ்பி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது மாணவியை, அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் 3 ஆசிரியர்கள், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை அடுத்து, 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளிக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர், கிராம மக்களிடம் நேற்று பிற்பகலில் எஸ்பி தங்கதுரை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர் தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு வேறு ஒரு பள்ளியில் பாதுகாப்பான கல்வி, இழப்பீடு வழங்க வேண்டும். பள்ளியில் கண்காணிப்பு கேமரா, சுற்றுச்சுவர், மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என்றனர். இக்கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என எஸ்பி தெரிவித்தார்.
மேலும், இன்று (8-ம் தேதி) மாவட்ட ஆட்சியரை, மாணவர்களின் பெற்றோர், ஊர் பிரமுகர்கள் சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க உள்ளனர். இதனிடையே அரசு தொடக்கப் பள்ளி இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள் பள்ளியில் 3-வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். பள்ளியின் முன்பும், கிராமத்திலும் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.