கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் ரகசிய கேமரா பொருத்தியது யார்? - தனிப்படை போலீஸார் விசாரணை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் இருந்த சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள ஆணையர் அறையில் இருந்த சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரகசிய கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், நகராட்சி தலைவரின் கணவரும், திமுக நகர செயலாளருமான நவாப், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாத காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கிருஷ்ணகிரி நகராட்சியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதில் அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதாக எஸ்பி, ஆட்சியரிடம் திமுக நகர செயலாளர் நவாப் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட கேமராவில் உரையாடல்கள் தெளிவாக பதிவாகி உள்ளது. அதிநவீன அந்த கேமரா ஆணையர் அறையில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. வேறு எங்கும் பொருத்தப்படவில்லை. அறையில் நடக்கும் நிகழ்வுகள் நேரடியாக பார்க்கும் விதமாக இந்த கேமரா பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இந்த கேமராவை பொருத்தியது யார், எப்போது பொருத்தப்பட்டது என விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

x