அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்: பாதயாத்திரை பக்தர்களுக்கு எச்சரிக்கை


தாராபுரம்: தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில் அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாகவும், தைப்பூசத் திருவிழாவுக்காக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியை கடந்து செல்லும் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதாக பல மாதங்களாகவே அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அவ்வப்போது தென்பட்ட முதலையை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால், ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் முதலையை பிடிக்க முடியாது என கைவிரித்தனர். முதலையின் நடமாட்டத்தை அறிந்த உள்ளூர் மக்கள் ஆற்றில் இறங்காமலும், அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லாமலும் கவனமாக இருந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தைப்பூசத் திருவிழாவுக்காக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அலங்கியம் அமராவதி ஆற்றின் வழியாக செல்லும் பக்தர்கள் வெயிலின் தாக்கம், உடல் அசதிக்காக ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டுமென, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: முதலை நடமாட்டம் இருப்பதை நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உறுதி செய்தனர். அதுகுறித்து வீடியோ சமூகவலைதளத்திலும் பரவி வருகிறது. முதலை நடமாட்டம் குறித்து பல மாதங்களாக புகார் தெரிவித்தும், வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூர் மக்கள் துணி துவைக்கக்கூட ஆற்றில் இறங்குவதில்லை. ஆனால் முதலை நடமாட்டம் இருப்பதை அறியாத பாதயாத்திரை பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். அங்குள்ள ஆற்றுப்பாலத்தின் கீழ் தான் அவ்வப்போது முதலையின் நடமாட்டம் தென்படுகிறது. எனவே, பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதலையை பிடிக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

x