ஊத்துக்குளி: ஊத்துக்குளி அருகே நிகழ்ந்த விபத்தில் ஏற்கெனவே கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு மாணவர் மூளைச்சாவு அடைந்தார்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று முன் தினம் காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, செங்கப்பள்ளி அருகே பள்ளகவுண்டன்பாளையம் பிரிவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். பெருந்துறையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் மாரசாமி (42) மற்றும் நடத்துநர் துரைசாமி (40) ஆகியோர் மீது பொதுச்சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், பிறர் உயிருக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் மற்றும் அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை உண்டாக்குதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊமச்சிவலசை சேர்ந்த கல்லூரி மாணவர் குருராஜ் (18) என்பவர் நேற்று மாலை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குடும்பத்தினர், சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.