தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 19 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண் பயிர்கள், தோட்டக்கலைப்பயிர்கள் உள்ளடக்கிய 19 புதிய ரகங்களை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 6 விவசாயிகளுக்கு புதிய பயிர் ரகங்களின் தொகுப்புகளை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடுவது வழக்கம். இதுவரை 929 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளடக்கிய 19 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

வேளாண் பயிர்களில் நெல்லில் மூன்று ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நடுத்தர, குட்டை மற்றும் வறட்சியைத் தாங்கும் கோ 59 ரக பயிரை சம்பா, பின்சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் பயிரிடலாம். இது பூச்சி எதிர்ப்பு தன்மையை தாங்கி வளரும். அதேபோல நெல்லில் சன்ன ரகங்களான ஏடிடீ 56 மற்றும் ஏடிடீ 60 ஆகிய புதிய பயிர் ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மக்காசோளத்தில் கோஎச் (எம்) 12, இறவைக்கும் நெல் தரிசுக்கும் ஏற்ற உளுந்து வம்பன் 12, வறட்சியை தாங்கவல்ல முத்துகள் அதிகம் கிடைக்கும் நிலக்கடலை சிடிடீ 1 மற்றும் நடுத்தர உயரம் கொண்ட வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3 ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி கோ 4, வீரிய ஒட்டு வெண்டை கோ (எச்) 5, மிளகாய் கோ 5 மற்றும் ஒரு குடும்பத்திற்கு மட்டும் சமைக்கப் பயன்படுத்தும் சிறிய அளவிலான சாம்பல் பூசணி பிஎல்ஆர்-1 வெளியிடப்பட்டுள்ளன.

பழப்பயிர்களில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வாழை காவேரி வாமன், அதிக விலை மதிப்புள்ள வெண்ணெய்பழம் (அவகேடோ) டிகேடி 2 மற்றும் அதிக தடிமன் கொண்ட ஏற்றுமதிக்கான எலுமிச்சை எஸ்என்கேஎல் 1 வெளியிடப்பட்டுள்ளன.

மலர் பயிர் (அரளி தோவாளை 1), இளநீர் மற்றும் கொப்பரை, நார் தொழிலுக்குப் பயன்படும் தென்னை ரகமான ஏஎல்ஆர் 4, ஜாதிபத்திரி அதிகம் கிடைக்கும் ஜாதிக்காய் பிபிஐ 1, சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன்படும் மூலிகைப் பயிரான சிறுகுறிஞ்சான் கோ 1 வெளியிடப்பட்டுள்ளன. சிப்பிக்காளானில் கேகேஎம் 1 என்ற ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் புதிய ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்' இவ்வாறு அவர் கூறினார்.

x