சொத்து வரி விதிப்புக்கு ‘ட்ரோன் சர்வே’ நடத்த எதிர்ப்பு: கோவை மேயர் இருக்கை முற்றுகை; திமுக கவுன்சிலர்கள் போராட்டம்!


கோவை: கோவை மாநகரில் சொத்து வரி விதிப்புக்கு ‘டிரோன் சர்வே’ நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மொத்தம் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்கிய பிறகு, திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 17 கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மேயர் இருக்கையை முற்றுகையிட்டனர். தரையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.

மாநகரில் ‘டிரோன் சர்வே’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சொத்து வரி விதிப்பை வாபஸ் பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர். பின்னர், திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து அவையிலிருந்து வெளியேறினர். மன்ற அரங்கு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் கூறும்போது, ‘‘மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, 100 சதவீதம் சொத்து வரி அமல்படுத்தியுள்ளனர். இதை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதை அடியோடு ரத்து செய்ய வேண்டும். குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்த தவறினால் 1 சதவீதம் அபராதம் விதிக்கும் நடைமுறையையும் ரத்து செய்ய வேண்டும். ‘டிரோன் சர்வே’ மூலமாக ஆய்வு செய்யப்பட்டு அளவுக்கு அதிகமாக சொத்து வரி விதிக்கப்படுவதால் அம்முறையை கைவிட வேண்டும்’’ என்றனர்.

மன்ற கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி பேசும்போது, ‘‘மாநகரில் வர்த்தக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமத் தொகை 20 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 80 சதவீதம் வசூலிக்கப்படவில்லை. மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யவும், உரிமம் பெறாத நிறுவனங்களை கண்டறிந்து உரிமம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வரித் தொகை மூலம் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வரி நிர்ணயத்தில் மறைக்கப்பட்டதை ‘டிரோன் சர்வே’ வெளியே கொண்டு வருகிறது. இதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும்’’ என்றார். முன்னதாக, டிரோன் சர்வே திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

x