குன்னூர்: வெலிங்டன் ராணுவ முகாமில் ரூ.6.52 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை மைதானத்தை, தென் பிராந்திய ராணுவ கமாண்டர் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி, ராணுவ மையத்தில், அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி நீளம் தாண்டுதல் குண்டறிதல், மலையேற்றம் மற்றும் ஓட்டப்பந்தயங்கள், இங்குள்ள தங்கராஜ் நினைவு மைதானத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், ரூ.6.52 கோடி மதிப்பில் இந்த மைதானம் புனரமைத்து, எட்டு டிராக் கொண்ட செயற்கை இழையிலான நவீன ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. பிராந்திய ராணுவ கமாண்டிங் அலுவலர் கரன்பீர் சிங் இன்று திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை இழை மைதானம் குறித்து உடற்கல்வி பயிற்சி அலுவலர் மேஜர் சச்சின் சிங் குந்தல் விளக்கம் அளித்தார். மேலும், ராணுவ பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் எம்ஆர்சி கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்னேந்து தாஸ் உட்பட ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.