சென்னை: வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக திமுக ஐ.டி விங்க் சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், "வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு சில கேள்விகள்! கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் பயணம் சென்ற 4 மாத கர்ப்பிணி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டவன் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளான்;
ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் எங்கே ? ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்புகாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் என்ன ? சமீப வருடங்களில் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயிலில் கஞ்சா, போதை மாத்திரை, ஹவாலா பணம் கடத்தல், பெண்களிடம் அத்துமீறல் மற்றும் தேர்தலுக்காக பணம் கடத்தி வருதல் என பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன;
இதனை தடுக்க ஒன்றிய ரயில்வே அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? 2014 முதல் 2024 வரை சுமார் 638-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக ஆண்டுக்கு 71 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித் துள்ளது. இதனைத் தடுப்பதற்கான, பாதுகாப்பான, விபத்தில்லாத ரயில் சேவைகளை வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன ?
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு பல ஆண்டுகளாக ரயில்வே துறையில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருப்பது ஏன் ? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன் ?” என்று எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.