சென்னை: மணப்பாறை மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் மிக விரைவாக, மிகுந்த பொறுப் புணர்ச்சியோடு கையாண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் இருவரும் குற்றவாளிகள் மீது எடுத்துள்ள கடுமையான நிலைப்பாடு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மணப்பாறை, மருங்காபுரி பள்ளிகளில் பள்ளி நிர்வாகத்தில் இருப்பவர் மற்றும் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரிடமும் பேசினேன். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக களத்திற்கு சென்று, நள்ளிரவு வரை களத்தில் இருந்து சூழ்நிலையைக் கையாண்டு இருக்கிறார்.
இந்த பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாதிரியான குற்றவாளிகள் வழக்கமாக குற்றம் செய்பவர்களாக (habitual offenders) இருக்கக்கூடும் என்பதால், அந்த நோக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நமது பள்ளிகள் பல்வேறு விசயங்களில் மிகச்சிறப்பாக இயங்கினாலும், மாணவிகள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாவது மிகுந்த வேதனை அளிக்கிறது. நமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டியவர்களே குற்றவாளிகளாக இருக்கின்ற சூழல், பெண் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்தக் கூடிய ஆழமான பாதிப்புகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
இந்தச் சூழலில் தைரியமாக பெண் குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் முன்வந்து புகார் அளித்திருப்பது பாராட்டுக்கு உரியது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகப் பார்க்கும் சமூகத்தில் இது எளிதான செயல் அன்று. அப்பொழுது தான் இம்மாதிரியான கொடும் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.
இதயத்தை நொறுக்ககூடிய இந்த குற்றங்களை மாவட்ட நிர்வாகம் மிக விரைவாக, மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு கையாண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் இருவரும் குற்றவாளிகள் மீது எடுத்துள்ள கடுமையான, பொறுப்புள்ள நிலைப்பாடு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டுமல்லாமல் மற்ற மாணவிகள் மனதிலும் இந்த வேதனையும், துயரமும், ஆத்திரமும் அளிக்கக் கூடிய மோசமான இந்த நிகழ்வு நிச்சயம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மாணவிகளை நானே நேரடியாகச் சந்தித்து அந்தப் பணியில் பங்கேற்க உள்ளேன்.
தொடர்ச்சியாக எனது நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடி, அவர்களோடு நெருக்கமான உறைவைப் பேணி வரும் எனக்கு, எனது பிள்ளைகளுக்கு நேர்ந்த இந்த துயரம் , ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல், தனிப்பட்ட முறையில் மிகுந்த துயரையும், தாங்க முடியாத வேதனையையும் அளிக்கிறது” என்று எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.