சென்னை: கோவை - திருப்பதி ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் ரயிலில் கூட பாதுகாப்பாக பயணிக்க முடியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோவை - திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகு அளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.
கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.