கோவை: கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் இன்று நடந்தது.
சிஐடியூ சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதுடன், தொழிலாளர்கள் உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என கூறி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நகலை கிழித்தனர்.
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் ஓய்வூதியம் ரூ 6,000-ஆக நிர்ணயிக்க வேண்டும், அரசுத்துறை, பொதுத்துறை என அனைத்துதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்வைக்க பல்வேறு கோரிக்கைகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஏஐடியூசி மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல், செல்வராஜ், எச்எம்எஸ் மாநிலத் தலைவர் ராஜாமணி, மனோகரன்,சிஐடியூ மனோகரன், வெள்ளியங்கிரி, ஐஎன்டியூசி சண்முகம், ரங்கநாதன், எம்எல்எப் தியாகராஜன், வி.சரவணக்குமார், ஏஐசிசிடியூ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.