மதவெறி பருப்பு பெரியார் மண்ணில் ஒருபோதும் வேகாது: கி.வீரமணி உறுதி


சென்னை: மத மாச்சரியங்களின்றி ஒன்றுபட்டு நீண்ட காலமாக வாழும் மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டுவோரை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். வட இந்திய மதவெறி பருப்பு இந்தத் ‘திராவிட மண்ணில்’– பெரியார் மண்ணில் – சமத்துவ சமூக நீதி மண்ணில் ஒருபோதும் வேகாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல்லாண்டுகளாக அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டை மாற்றி அமளிக் காடாக்கவும், வரும் அடுத்தாண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டும் பாஜக, ஆர்எஸ்எஸ், ஹிந்து முன்னணி என்ற பல பெயர்களில் உள்ள மதவாத சக்திகளும், ஆரியமும் இணைந்து, கோவி்ல்களையும், பாமர மக்களின் பக்தியையும், திருவிழாக்களையும் ‘‘அரசியல் மூலதனமாக்கி’’, தங்களது கட்சிகளை, ஆட்சிகளைப் பலப்படுத்த, வடபுலத்து மாநிலங்களில் கையாண்ட கிளர்ச்சிகளை – தங்களது ‘‘ரெடிமேட்‘‘ தயார் திட்டங்களை ஆயத்தமாக்கி, தமிழ்நாட்டு அரசியலைக் கைப்பற்ற கோவில் – பக்தியை துருப்புச் சீட்டாக்கிப் பார்க்க முனைந்துள்ளனர்! இது ஆர்எஸ்எஸ் பால பாடம்!

மதக் கலவரங்களுக்குத் தூபம் போட்டு இங்கே ஏதாவது அரசியல் அறுவடை செய்யலாமா என்று ஒரு புது முயற்சியில் – மற்றவை – பிறரை ஏவிவிட்டு கூலிப் பட்டாளங்களை களத்தில் இறக்கிப் பார்த்தும், அது படுதோல்வியில் முடிந்ததால், கன்னியாகுமரி கடலில் குளித்து, இப்போது ‘‘மலைகளைக் காப்போம்’’ என்றும், அப்பாவிகளை இதில் ஈர்க்கலாமா என்று பலவித உத்திகளில் தமிழ்நாட்டில் இறங்கியுள்ளனர்!

தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நிதி நெருக்கடி தருதல், அடாவடித்தனம் செய்யும் ஆளுநர் மூலம் நல்லாட்சிக்கு முட்டுக் கட்டை போடுதல், எதிர்பாராமல் நிகழும் மின் கசிவுகளுக்குப் பழிபோட்டு ‘அரசியல்’ நடத்த அதிகாரிகளையே பகடைக் காய்களாக்குதல், ஜாதிக் கலவரங்களைத் தூண்டிட சில சம்பவங்களை மூலதனமாக்கிப் பார்த்தல் முதலிய பல வித ‘‘உத்திகளில்’’ இறங்கியும், திராவிட நாயகரின் தலைமையில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியவில்லை என்பது உறுதியான உண்மை! அத்துடன் உள்ள கொள்கைக் கூட்டணியான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியை உடைக்கவும் முடியவில்லை என்பதால், திடீர் என்று மதக் கலவரங்களைத் தென் மாவட்டத்தில் ஏற்படுத்திப் பார்க்க முனைகின்றனர்! மலைகளுக்கு ஆபத்தாம்!

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெளியூர்களில் இருந்து திரட்டப்பட்ட ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து, ஜாதி, மத வேறுபாடின்றி ஒருங்கிணைந்த சகோதரர்களாக, நல் உறவுகளாக காலங்காலமாய் வாழும் மக்களிடையே மதவெறி ஊட்டி, பிளவுப்படுத்த முனைவதில் – பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது! அந்த வட இந்திய மதவெறி பருப்பு இந்தத் ‘திராவிட மண்ணில்’ – பெரியார் மண்ணில் – சமத்துவ சமூக நீதி மண்ணில் ஒருபோதும் வேகாது! வேகவே, வேகாது!!

‘கந்தூரி விழாவில்’ ஆடு, கோழி பலியிடுகிறார்கள் சிறுபான்மையினர் என்ற ஒரு போலிக் காரணம் கூறி, மதவெறியை ஊட்டி, மதக்கலவரம் வெடிக்கச் செய்ய முயற்சிக்கும் இந்த மதவெறியைத் தூண்டும் கூட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்! கோவில்களில் பலியிடவில்லையே! இந்திய அரசமைப்புச் சட்டப்படி மத விஷயங்கள் என்றால், அது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல. சில உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட இதில் என்ன காரணத்தாலோ சரியான பார்வை இல்லை என்பது வேதனைக்கு உரியது!

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கத் துடிப்போரின் உள் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலத்தையும், மதக் கலவரத் தூண்டுதலுக்கான ஆர்ப்பாட்டத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் விசித்திர பார்வை – விநோதமாக நீதித் துறையில் வருவது அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 அடிப்படை மத உரிமைகளையே அலட்சியப்படுத்தப் பார்க்கும் ஒரு தவறான பார்வையே! குறைந்தபட்சம் கரோனா காலத்துத் தீர்ப்புகளை நினைவூட்டல் அவர்களுக்கு நல்லது!

இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமையின்படி மத உரிமை என்பது கட்டுப்பாடற்ற உரிமைகள் அல்ல! Article (கூறு) 25 Subject to public order, morality and health and to the other provisions of this Part, என்றுதான் உள்ளது. அதேபோல, Article 26–லும் ஒரே ஒரு வேறுபாடு மட்டும்தான் (25 கூற்றின் பிற்பகுதியில் மாற்றம்).

எனவே, எதனையும் ஆய்வு செய்யாது, உடனே அனுமதியை மட்டும் காவல்துறை அளிக்க வேண்டும் என்று கூறுவது சரியாகுமா ? சட்டம் ஒழுங்கினை (Public Order) பற்றி யோசிக்க வேண்டாமா ? கோவில் வழிபாடு என்று கூறி, உள்ளே சென்று அதை கிளர்ச்சிக் கூடமாக்குவதைக் கண்டும் காணாமல் அரசு தனது பார்வையைத் திருப்பிக் கொள்ள முடியுமா ? ஒன்றுபட்டு சகோதரர்களாக வாழும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதா ?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் மத மாச்சரியத்திற்கு அப்பாற்பட்டு பன்னூறு ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழுகின்றனர். அதைக் குலைப்போர் யாராக இருந்தாலும், தமிழக அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும்போது, அதற்கு முட்டுக்கட்டை போட நீதிமன்றங்களைப் பயன்படுத்துவது எவ்வகையிலும் பொது நலம், பொது அமைதிக்கு உகந்ததாகாது! இந்து – இஸ்லாமிய – சமண வழிபாட்டுத் தலங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றனவே!

இறைச்சிக் கடைகளும், உணவு விடுதிகளும், சாப்பிடும் மக்களும் இல்லையா ? உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு முசாபர் நகரில் திட்டமிட்ட வகையில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி, சிறுபான்மை – பெரும்பான்மை என்று பிளவுபடுத்தி (Polarisation) அரசியல் ஆதாயம் பெற்றதுண்டு. இது சங் பரிவார்களுக்கே உரித்தான அணுகு முறையே! திட்டமிட்டே இப்படி வலிய வம்புகளை உருவாக்கி, மதக்கலவர பூமியாக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதனை அரசியல் தூண்டியலாக்கி மீன் பிடிக்க முனையும் காவிக் கூட்டத்தின் கனவுகளும், ஆசைகளும் ஒருபோதும் திராவிட ஆட்சியில் நிறைவேறாது! எந்த மலைகளுக்கும் தமிழ்நாட்டில் ஆபத்து இல்லை. அண்ணாமலைகளின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே அவர்கள் அதைக் காப்பாற்றவே இப்படி ஒரு புது வேஷம் கட்டி ஆடப் புறப்பட்டுள்ளார்கள் போலும்!அனைவரும் ஒன்றுபட்டு அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டைக் காப்போம்!

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நாசகார கும்பலின் திட்டமிட்ட கலவரத் தூண்டுதலை ‘திராவிட மாடல்‘ அரசு அடக்கி, அமைதிப் பூங்காவை அமளிக் காடாக்காமலிருக்க அனைவரும் கட்சி பேதமின்றி, மக்கள் நலங்காக்கும் மனித சங்கிலியாக நின்று காட்டுவோம்! வென்று காட்டுவோம். மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்” என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

x