சென்னை: தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக நமது அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றி வந்தவர் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, உக்ரைன் போர்க்காலக் கட்டத்தில், அங்கிருந்து நமது மாணவர்களை அழைத்து வருவதில் திறம்படச் செயலாற்றியவர்.
அயலகங்களில் தமிழர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னின்று உதவிடும் மனப்பாங்கு கொண்டவர் அவர். ரமேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றி வந்த சக அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.